தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விவேக் இன்று காலை 4.35 மணி அளவில் காலமானார். 

​தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை ஷூட்டிங் ஒன்றை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி மற்றும் மகள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட விவேக், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று முன் தினம் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 

ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்த மருத்துவமனை நிர்வாகம், அவருக்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது. அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விவேக் இன்று காலை 4.35 மணி அளவில் காலமானார். மக்கள் சின்னக் கலைவாணர் என செல்லமாக அழைத்து வந்த பிரபல காமெடி நடிகர் விவேக்கின் திடீர் மரணம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு விவேக்கின் உடல் கொண்டு வரப்பட்டது. 

Scroll to load tweet…