நடிகர் விஷால் சமூக அக்கறை, அரசியல், நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், என பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கடந்த வருடம் கூட , ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால் இவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வேன் என கூறினார்.

இந்த நிலையில், நேற்று மாலை விஷால் கைதானது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.  போலீஸ் நிலையத்தில் கையில் விலங்குடன் விஷால் நிற்பது போல், அந்த புகைப்படம் இருந்தது. 

அதை பார்த்த ரசிகர்கள் குழம்பினார்கள். இந்த படம் போலியானதா அல்லது நிஜமாகவே விஷால் கைது செய்யப்பட்டார் என பலர் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, 'அயோக்கியா' படப்பிடிப்பில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சென்னையில் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அப்போது விஷாலை கைது செய்து கைவிலங்குடன் அழைத்து செல்வது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.  அந்த புகைப்படம் தற்போது எப்படியோ வெளியாக இதனை பார்த்த சிலர்,  விஷால் கைது செய்யப்பட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷிகண்ணா நடிக்கிறார். மேலும்  பார்த்திபன் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.