actor vishal ...income tax raid

இரண்டாயிரம் ரூபாய் பணக்கட்டுகளுடன் பிடிபட்ட விஷாலை, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கடந்த மாதம் நடிகர் விஷாலின் , விஷால் பிலிம் பேக்ட்ரி அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தியதோடு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த டிடிஎஸ் பணம் 50 லட்சதம் ரூபாயை முறையாக செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அது குறித்து விஷால் நேரடி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விஷாலுக்குப் பதிலாக அவருடைய ஆடிட்டர் விளக்கமளித்தார்.

மேலும் அந்த தொகையை இரண்டு மூன்று தவணையாக கட்டிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. நடிகர் விஷால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சினை, கந்துவட்டி, குழந்தைகள் மரணம் என்று பல பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் கூறி வருவதால் தான் அவரது அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி, “விரைவில் நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என கொளுத்திப் போட்டார்.

இந்நிலையில் நடிகர் விஷால் கட்டுக் கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்டு, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திவருவது போன்ற வீடியோ காட்சி வலைதளங்களில் பரவிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பதறிப்போயுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால் பரபரப்பான தமிழகத்தில் மேலும் ஒரு ரெய்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்

ஆனால் இரும்புத்திரை படத்தின் புரமோஷனுக்காக வேண்டுமென்றே படக்குழு செய்த காரியம் இதுவென்று தெரியவந்தது.

விஷால், சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் அந்த ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அந்த வீடியோ காட்சி தெளிவுபடுத்தியுள்ளது. 51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பதிவின் முதல் 30 வினாடிகள் விஷால் பெரும் தொகையுடன் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது போன்று நாம் அனைவரையும் நம்ப வைத்தாலும் அதன் பின்னர் அந்த பதிவில் நடிகர் அர்ஜுன் குறுக்கிடும்போது தான் அது ஒரு பிராங்க் வீடியோ என்று உணரமுடிகிறது. இந்த வீடியோ குறித்து விஷால் தரப்பில்,“இந்த வீடியோ இரும்புத்திரை படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது. மற்றபடி எதுவுமில்லை” என்று கூறினார்.