விமானத்தில் சக பயணியை துஷ்பிரயோகம் செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன்!
பிரபல மலையாள நடிகர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சக பயணி ஒருவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் விநாயகன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம். மலையாளம் மட்டும் இன்றி தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார்.
இதை தொடர்ந்து தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விநாயகன். தமிழில் இவரின் நடிப்புக்கு வரவேற்பு இருந்த போதிலும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்ததால் சுமார் 11 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா நடிகராக அறியப்படும் இவர், சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, 10 பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் விநாயகன்.
இண்டிகோ விமானத்தில், காத்திருந்த சக பயணியிடம் நடிகர் விநாயகன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் ஒருவர்.
அதாவது கோவா விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தில் ஏறக் காத்திருந்தபோது அவரோடு பயணிக்க இருந்த சக பயணி, தன்னுடைய செல் போனின் சில வீடியோக்களை பார்த்து கொண்டிருந்த போது, விநாயகன் அந்த பயணியை துஷ்பிரயோகம் செய்வது போல் நடந்து கொண்டதோடு தன்னை வீடியோ எடுத்ததாக பிரச்சனை செய்துள்ளார்.
இதற்க்கு அந்த பயணி வீடியோ எடுக்கவில்லை என கூறியதோடு, தன்னுடைய போனை செக் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகன் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக மனுதாரர் கூறி உள்ளார். அப்போதே விமான நிறுவனந்தை அணுகிய போது அவர்களிடம் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காததால், பின்னர் ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்ததாகவும் மனுதாரர் கூறி உள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவில் விநாயகனை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.