வயிற்றில் குட்டியுடன் பசியோடு வந்த, கர்ப்பிணி யானைக்கு இனி சாப்பிடவே முடியாத அளவிற்கு, அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து, கொலை செய்த சில கொடூர புத்தி கொண்டவர்களுக்கு எதிராக, மக்கள், திரை பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில், பிரபல நடிகரும்,தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர், பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த்  அறிக்கை மூலம் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின், வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளனர். அதனை அந்த யானை சாப்பிட்ட போது அதன் வாயிலேயே வெடித்து உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

 இந்த சம்பவம் மனிதாபிமானத்திற்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கொரோனா போன்ற, பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது இதுபோன்ற சம்பவங்களில் பிரதிபலிப்பாக தான் பார்க்கிறேன். 

யானையை வெடி வைத்து கொன்ற அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க வேண்டும். காட்டுயானை கொன்றது ஒட்டுமொத்த மக்களுக்கும் மனவேதனையை உண்டாக்கி உள்ளது என தன்னுடைய அறிக்கையில் அதிரடியாக தெரிவித்துள்ளார் அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த்.