ரசிகர்களை நல்வழிப்படுத்தாத நடிகர் விஜய்.. வழக்குப்பதிவு செய்து தூக்குங்க.. போலீஸுக்கு பறந்த புகார்.!
`கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில் தங்களின் குடும்பத்தினரைப் பற்றியோ அல்லது தங்களின் உயிரைப் பற்றியோ, அருகில் உள்ள சக ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அவரவர் எதிர்காலம் குறித்தோ சிறிதளவும் கவலைப்படாமல் கட்-அவுட் மீது ஏறி, நடிகர் விஜய் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
ரசிகர்களை நல்வழிப்படுத்தாத நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.
வலிமை படத்துக்கும் புகார்
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரும்போது, ரசிகர்கள் பாலை திருடி கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தொடர்ந்து புகார் கூறி வருகிறது. அண்மையில் நடிகர் அஜித் நடித்து வெளியான ‘வலிமை’ படம் வெளியாவதற்கு முன்பாக, அஜித் ரசிகர்கள் பாலை திருடாமல் இருக்க உஷாராக இருக்கும்படி பால் முகவர்களுக்கு அந்தச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரசிகர்களின் அஜாக்கிரதையான செயலைக் கண்டிக்காத, ரசிகர்களை நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.
தண்ணீர் கேனில் பால்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் பொன்னுசாமி புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதில், “நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தைக் கொண்டாட ரசிகர்கள் பலரும் கடந்த சில நாட்களுக்கு முன் திரண்டு, திரைப்பட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனில் பாலை நிரப்பி, அதை ஒரு கையால் தூக்கிக்கொண்டு, `கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில் தங்களின் குடும்பத்தினரைப் பற்றியோ அல்லது தங்களின் உயிரைப் பற்றியோ, அருகில் உள்ள சக ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அவரவர் எதிர்காலம் குறித்தோ சிறிதளவும் கவலைப்படாமல் கட்-அவுட் மீது ஏறி, நடிகர் விஜய் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
நிரந்தர தடை தேவை
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானபோது, அவர்களுடைய கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய மேலே ஏறியபோது, அவை சரிந்து விபத்து ஏற்பட்டதால், பல்வேறு தருணங்களில் சில ரசிகர்கள் உயிரிழந்ததுடன், பல ரசிகர்கள் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையிலும், கட்-அவுட் சரிந்தால் அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த பின்னரும், நடிகர் விஜய் நடித்த `பீஸ்ட்' படத்தின் 100 அடிக்கும் மேலான கட்-அவுட்டின் மீது ஏறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், ரசிகர்களின் இந்த அஜாக்கிரதையான செயலைக் கண்டிக்காத, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் திரையரங்க வளாகங்களில் எந்த ஒரு நடிகரின் கட்-அவுட்டுகளின் மீது ஏறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்” எனப் புகாரில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.