மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜய் சேதுபதி நடிக்கும் ‘கடைசி விவசாயி’படத்தின் ஸ்டில் ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட விவசாயியாக நடித்திருப்பதாக குத்துமதிப்பான செய்திகள் உலவி வருகின்றன.

”காக்கா முட்டை” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிகண்டன். இப்படம் உலக அளவில் கொண்டாடப்பட்ட படமாகும். தமிழகத்திலும் அப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’யும் தமிழ் சினிமாவின் அபாரமான படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதன் பிறகு புதுமுகத்தை வைத்து ”கடைசி விவசாயி” படத்தை தன் சொந்த முயற்சியில் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இந்த முயற்சி குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் விஜய் சேதுபதியில் புகைப்படம் பரபரப்பாகியுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் வட்டாரத்தில் விசாரித்தபோது ‘கடைசி விவசாயி’படம் 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவில்லை. 85 வயதான உண்மையான விவசாயி ஒருவரே படத்தின் கதாநாயகன் என்றும் கூறுகின்றனர். விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதும் அதை நிரூபிப்பது போல் உள்ள அந்த புகைப்படமும் படத்தின் எதிர்பார்ப்பை பெருமளவுக்கு உயர்த்தியிருப்பதென்னவோ உண்மைதான்.