தமிழர்,சிங்களர் குறித்த சர்ச்சைகள் எதுவும் இடம்பெறாமல் வெறுமனே கிரிக்கெட் குறித்த படமாக மட்டுமே உருவாக உள்ளதால் முத்தையா முரளிதரன் குறித்த பயோபிக் படத்தில் நடிப்பதிலிருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என்று பல மறுபரிசீலனைகளுக்குப் பின் அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஒருவாரத்துக்கு முன்பு படத்தை விட்டு நிச்சயமாக வெளியேறவிருக்கிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்த நிலையில் இன்னொரு முறை பல்டி அடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.  சமூக வலைத்தளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கருத்துகள் பதிவிட்டனர். இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியது. அவர் ஏறத்தாழ படத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றே செய்திகள் வந்தன.

இந்நிலையில், முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தி ஆஸ்திரேலியாவின்  மெல்போர்னில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக் படத்தில் தான் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இப்படம் யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’படம் அவ்விழாவில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் சிறந்த இயக்குநர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருது பெற்றது.