அரசியலில் கமலும் ரஜினியும் இணைந்து செயலாற்றவேண்டும் என்று பேசியதிலோ, அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அடுத்து வரும் தம்பிமார்களுக்கு வழிவிடவேண்டும் என்று பேசியதிலோ தன் மகன் விஜய்க்கு எந்தவித தொடர்புமில்லை என்று விளக்கமளித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சி.

கமல் 60’ நிகழ்ச்சியில் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய பேச்சுக்கள் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அப்பேச்சில் தன் மகன் விஜய் எதிர்காலத்தில் முதல்வராகவேண்டும் என்கிற ஆசை தெறிக்கிறது என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் அவர்.

நேற்று நான் கமல் நிகழ்ச்சியில் மேடைக்கு சென்றபோது சமூகப் பார்வையில் படம் எடுத்த ஒரு தமிழனாகத்தான் மேடையில் ஏறினேன். நேற்று பேசிய எந்த கருத்துக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே மேடையில் பார்த்தேன். ஏன் இந்த மேடையை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று எனக்கு தோன்றியது.மேடையில் ஏறுவதற்கு முன்பதாக விஜயுடன் நான் பேசவில்லை. அரசியல்ரீதியாக அவர் எதுவும் சொல்வதும் கிடையாது . நானும் பேசுவதும் கிடையாது.

நான் பேசும்போது எந்த இடத்திலும் நான் விஜய் ரசிகர்கள் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் ஒரு நல்ல தலைவர் வேண்டும். ஆளுமை மிக்க ஒரு தலைமை வராதா? புதியவர்கள் வரமாட்டார்களா? என்ற எதிர்ப்பார்ப்போடு ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது என்று பேசினேன். இளைஞர் என்றால், விஜய் ரசிகர், சூர்யா ரசிகர் எல்லோருமே இளைஞர்கள் தானே. முதலில் இருவரும் இணைய வேண்டும். ரஜினி கமல் வடக்கு - தெற்கு போன்றவர்கள் எனவே என் ஆசையை சொல்லிவிட்டேன். அதை முதலில் ரஜினியும் கமலும் யோசிக்க வேண்டும். பிறகு இணைய வேண்டும் அப்படியே இணைய நினைத்தாலும் சுற்றி இருக்கக் கூடிய அரசியல் அவர்களை இணைய விடாது. குதிரை பேரம் எல்லாம் நடக்கும். அதையும் மீறி அவர்கள் இணைய வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.