நடிகர் விஜய் பிறந்தநாளை ஒட்டி மதுரை மற்றும் பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அவர் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தவேண்டும் என்றும் மிக விரைவில் முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நாளை தனது 45 பிறந்தநாளை நடிகர் விஜய் கொண்டாடவிருப்பதை ஒட்டி அவரது தளபதி63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்களை வெளியிட தயாரிப்பாளர் தரப்பு பரபரப்பாக இயங்கிவருகிறது.இன்னொரு பக்கம் ஏராளமான ஃபேன் மேட் டிசைன்களை உருவாக்கி ட்விட்டர் மற்றும் முகநூல் வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறமிருக்க சுமார் 100 நாட்களுக்கு முன்பே விஜய் பிறந்தநாளுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி நடத்தி வந்த அவரது ரசிகர்கள் இனியும் தாமதிக்காமல் விஜய் உடனே அரசியலுக்கு வரவேண்டும் என்று துடிக்கின்றனர். அவர்களது துடிப்பு அத்தனை போஸ்டர்களிலும் வெளிப்படுகிறது.

மதுரக்காரங்களுக்கு எப்பவுமே உடம்புல ஒரு நரம்பு ஜாஸ்தி என்பதை நிரூபிக்கும் விதமாக  மதுரை முழுவதும் விஜயின் ரசிகர்கள் படௌபயங்கர அரசியல் வாசகங்களுடன்  சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் விஜய்-யை அரசியலுக்கு அழைத்தும், ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விஜய் அரசியலுக்கு வந்து, முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்றும் சுவரொட்டிகள் வாயிலாக ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.