சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரி டிரைவர், பேனர் அச்சடித்தவர்கள் மீது பழி போடுவதை நடிகர் விஜய் ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய நடித்துள்ள‘பிகில்’ படம் விரைவில் வெளி வர உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகன் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் குறித்தும் நடிகர் விஜய் பேசினார்.
“பேனரால் இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு நான் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். சுபஸ்ரீ இறந்த விஷயத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யவில்லை. லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகிறார்கள். இதுபோன்ற சமூக பிரச்னைகளுக்கு 'ஹாஷ்டேக்' போட வேண்டும்.  சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாமே சரியாகிவிடும்.” என்று நடிகர் விஜய் பேசினார்.
பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கமாட்டோம் என அறிவித்தன. இதேபோல நடிகர் விஜயும் தங்கள் ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிலும் சுபஸ்ரீ மரணத்தையும், அவர் இறந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகளையும் ஆதங்கத்தோடு நடிகர் பேசியிருக்கிறார்.