’இன்னும் இரண்டே மாதங்களில் தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்குற அளவுக்கு எனது அறிவிப்பு வெளியாகும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’என்று தனது ரசிகர்களுக்கு உற்சாக செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.

‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்குகளுக்கு கணக்கு முடித்து வைத்துவிட்டு தனது செகண்ட் இன்னிங்ஸ்க்காக ஃப்ரெஸ்ஸாக தயாராகி வருகிறார். அவருடன் காமெடிக்காட்சிகளை விவாதித்து வந்த குட்டிக் காமெடியன்கள் மீண்டும் வடிவேலு அலுவலகத்துக்கு ரெகுலராக ஆஜராக ஆரம்பித்துள்ளார்கள்.

வடிவேலு நடிப்பில் உருவாகும் அதிரிபுதிரியான  படம்  ஒன்று அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்’ என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பால் வடிவேலு ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள்.