நேசமணி தற்போது ட்ரென்ட் ஆகியுள்ளதால், நான்கு வருடத்திற்கு பின் வைகை புயல் வடிவேலு, முதல் முறையாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு வீடியோ இன்டெர்வியூ கொடுத்துள்ளார். அதில் எடுத்ததுமே இந்த ஊடகம் மூலம் என் மக்கள் அனைவரையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார். 
 
இதை தொடர்ந்து பேச துவங்கிய வடிவேலு, "ஆரம்பத்தில் இருந்தே என்ன நடக்கிறது என தனக்கு புரியவில்லை.  எனக்கு சமூக வலைத்தளங்கள் உபயோகப்படுத்தும் பழக்கம் இல்லை. அதனால் மகன், மருமகள், மகள் சொல்லுவதை வைத்து தான் தெரிந்து கொள்கிறேன். 

அதே போல்... நேசமணி தலையில் சுத்தி விழும், காட்சியை பதிவு செய்து,  பிரபல படுத்திய இளைஞர் விக்னேஷுக்கு தன்னுடைய நன்றிகள் என்றும், நம்ப ஊர் பிள்ளை என்பதால் அந்த துடிப்பு இருக்கும் என அவரை பெருமையாக பேசினார்.

தொடர்ந்து பேசிய வடிவேலு, நான் பல படங்களில் நடித்துள்ளேன், பலர் என்னுடைய காமெடியை பார்த்து விட்டு சிரித்த முகத்துடன் தூங்குகின்றனர். இப்படி ஒரு விஷயம் மிகவும் ட்ரெண்ட் ஆனதால், தன்னை விட மக்கள் தான் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த பெருமை அவர்களை தான் சேரும்.

இந்த நேசமணி என்கிற கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் சித்திக், தமிழ் சினிமாவிற்கே பெருமை தேடி தந்த மலையாள இயக்குனர் அவர் என அவரை பாராட்டினார். மக்கள் பலர் என்னுடைய காமெடி காட்சிகளை ரசித்து ருசித்தமைக்கு, கடவுள் கொடுத்த பரிசாக இதை பார்க்கிறேன். 

பின் தன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். மக்களை சிரிக்க வைக்கும் ஒரு பிள்ளையை பெற்றதற்கு  தன்னுடைய தாய் சரோஜாவிற்கும், தந்தை நடராஜனையும் நினைத்து மிகவும் பெருமை படுவதாக கூறியுள்ளார்.