மாரடைப்பு காரணமாக, கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இவரது மறைவு குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய இரங்கலை தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. சமீப காலமாக இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பட வாய்ப்புகளும் கிடைத்தது.

கோலமாவு கோகிலா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் திடீர் என உடல் நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவரை, தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். கை கால்  செயலிழந்து, அவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவே வடிவேல் பாலாஜி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி, உயிரிழந்தார்.   வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு தொடர்ந்து பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகினார்கள். நடிகர் விவேக், சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது. என கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

அதே போல் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேல் பாலாஜி மறைவிற்கு திறமை மிக்க நடிகர்களில் ஒருவரான வடிவேல் பாலாஜி அவர்களின் எதிர்பாராத மரணம் என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தனுஷ் தெரிவித்துள்ளார். இவர்களை போலவே பல பிரபலங்கள் தொடர்ந்து வடிவேல் பாலாஜி மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.