தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுமார் 11 வருடங்களாக தமிழ்த் திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவந்த அவருக்கு ஒருவர் கூட வாழ்த்துச் சொல்லவில்லை.

தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் 2008ல் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த உதயநிதி தயாரித்த முதல் படம் விஜய் நடித்த ‘குருவி’. அடுத்து சூர்யாவின் ‘ஆதவன்’ கமலின் ‘மன்மதன் அம்பு’ படங்களையும் தயாரித்த அவர், 2012ல் ராஜேஷ் இயக்கத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’படத்தின் மூலம் ஹீரோ எண்ட்ரி கொடுத்தார். அந்த முதல் படம் மட்டுமே அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாக அமைந்தது.

அடுத்து ‘இது கதிர்வேலன் காதல்’ தொடங்கி கடையாக ரிலீஸான ’கண்ணே கலைமானே’ வரை எந்தப் படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.’சைக்கோ’,’ஏஞ்சல்’,’கண்ணை நம்பாதே’ ஆகிய மூன்று படங்கள் இன்னும் உதயநிதியின் கால்ஷீட்டை நம்பிக்காத்திருக்கின்றன. கதாநாயகிகளை படத்துக்குப் படம் மாற்றி வந்த உதயநிதி அதிகபட்சமாக நயன்தாராவுடன், அவர் தயாரித்த ‘ஆதவன்’உட்பட மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறார். சந்தானம் இல்லாத படங்கள் குறைவு என்று சொல்லுமளவுக்கு உதயநிதியின் அநேக படங்களில் சந்தானம் இருந்திருக்கிறார்.மற்றவர்களை மன்னித்துவிடலாம் இந்த இருவர் மட்டுமாவது வாழ்த்து சொல்லியிருக்கலாம் உதயநிதிக்கு.