அதிக பணம் புரளும், திரையுலகம் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கின் காரணமாக பரிதாப நிலையை எட்டி இருக்கிறது. ஒருபக்கம், திரையுலகை நம்பி கூலி வேலை செய்பவர்கள், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாக கூறி வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், முன்னணி நடிகர்கள் தானாக முன்வந்து உதவி வருகிறார்கள்.

அதே நேரத்தில், பைனாஸ் பெற்று பட தயாரிப்பை மேற்கொண்டு வந்த தயாரிப்பாளர்களும், குறிப்பிட்ட தேதியில் படத்தை முடிக்க முடியாமல், அதிக வட்டி செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, திரை பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, கசிசமாக சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதன் பலனாக நடிகர்கள் இப்போது தங்களுடைய சம்பளத்தை குறைத்து கொள்வது மட்டும் இன்றி, விஷ்ணு விஷால் போன்ற நடிகர்கள் தங்களின் முழு சம்பள தொகையும் படத்தில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த அணைத்து தொழிலாளர்களுக்கும் கொடுத்தார்.

இதை தொடர்ந்து, தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து, அடுத்ததாக தான் இயக்க உள்ள 'அருவா' படத்தின், சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து கொண்டதாக, இந்த படத்தின் இயக்குனர் ஹரி தெரிவித்திருந்தார்.

இவரை தொடர்ந்து, பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரருமான, ஏ.எல்.உதயா, தற்போது தான் நடித்து வரும் படங்களின் சம்பளத்தை 40 சதவீதம் குறைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
.
தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா  வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம். மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால் தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.

நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "அக்னி நட்சத்திரம்" திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த  சம்பளத்திற்கு  ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்... ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ... நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்.

அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் "மாநாடு" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன்.  இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண்,இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். என கூறியுள்ளார்.