கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், 4வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று காலை  நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை மீட்புப் பணி நடைபெற்று வரும் இடத்துக்கு வருகை புரிந்த  நடிகர் தாமு அந்த இடத்தின் ஒரு ஓரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.

சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட 'ரிக்' இயந்திரத்தின் செயல்திறன் இதற்கு போதவில்லை என்பதால் நேற்று இரவு இரண்டாவது 'ரிக்' இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மற்றொரு புறம் குழந்தை சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. எப்படியாவது குழந்தை சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட வேண்டும் என பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தாமு, குழந்தை மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு இன்று காலை சென்றார். அதன் அருகே ஒரு இடத்தில் அமர்ந்த தாமு, குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில முன்னணி நடிகர்கள் இன்று மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் கமல், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து சுர்ஜித் மீட்புக்காக உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.