பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார்.கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான  சிச்சோரே படத்திற்கு பிறகு அவர் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் கைவசம் இருந்த அத்தனை படங்களும் கைநழுவி போனதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். 

சுஷாந்தின் சொந்த ஊரான பாட்னாவில் சல்மான் கான் மற்றும் கரண் ஜோஹரின் உருவ பொம்மையை எரித்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுஷாந்தின் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாலிவுட்டை நோக்கி கேள்வி கேட்க வைத்துள்ள இதே நேரத்தில், மீளமுடியாத துயரத்துடன் சுஷாந்தின் குடும்பத்தினர் அவருடைய அஸ்தியை பாட்னாவில் உள்ள கங்கை ஆற்றில் கரைத்துள்ளனர். 

அக்காக்களின் செல்ல தம்பியாகவும், அப்பாவின் ஆசை மகனாகவும் வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் இன்று நம்முடன் இல்லை என்பதை அவருடைய குடும்பத்தால் ஏற்க முடியவில்லை. கனத்த இதயத்துடன் சுஷாந்தின் அஸ்தியை அவருடைய தந்தை கங்கை ஆற்றில் கரைக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேதனையுடன் பகிரப்பட்டு வருகிறது.