actor surya liked to have a tea in the normal street shop
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று பொங்கல் முன்னிட்டு வெளியாகவுள்ள மூன்று படங்களில் சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்" படமும் ஒன்றாகும். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது; இதில் விக்னேஷ் சிவன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், அனிருத், செந்தில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இப்படம் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில்,
"தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்த போது தெரிந்துக்கொண்டேன்.
நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்; அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.

நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்" என்றார்.
"தானா சேர்ந்த கூட்டம்" படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
