உலக நாடுகளை கடந்து, இந்தியாவின் உள்ளே நுழைந்த கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதன் கொடூரமுகத்தை காட்டி கொண்டே செல்கிறது. இதில் இருந்து மக்களை பாதுகாப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

உயிரை காக்க ஊரடங்கு போட்டால்,  பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும், இதனால் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட  கஷ்டப்பட்டு வருவதாக கூலி வேலை செய்யும் பலர் தெரிவித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் சமூக இடைவெளியோடு செய்யக்கூடிய சில வேலைகளுக்கு தளர்வு ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் முற்றிலும் முடக்கப்பட்ட சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு, தற்போது ஏற்படுத்தியுள்ள தளர்வு காரணமாக 25 சதவீத பேர் வேலை பெறுவார்கள். 

திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள், வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட போது முதல் ஆளாக வந்து உதவியவர் நடிகர் சூர்யா என்பது நாம் அறிந்தது தான். இவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பல நடிகர்கள் உதவ முன்வந்தனர்.

இதை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா, உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் ஏழை மக்களுக்கு, மதுரை எம்பி வெங்கடேசன் அன்னவாசல்’ என்ற திட்டத்தை ஆரம்பித்து அதன் மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறார். இது மதுரை மட்டுமின்றி, ஊரடங்கு  காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் உணவுகள் அனுப்பட்டு வருகிறது.

இந்த அன்னவாசல் திட்டத்திற்கு நடிகர் சூர்யா 5 லட்சம் நன்கொடை அளித்து உதவியுள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் எம்பி  தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 

நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த சூர்யாவுக்கு நன்றி. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

நடிகர் சூர்யாவின் இந்த உதவிக்கு அவருடைய ரசிகர்கள் மட்டும் இன்றி, பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.