தன்னை சில மாதக்களாகக் காக்க வைத்துவிட்டு திடீரென ‘விஸ்வாசம்’சிவாவுடன் தனது 39 வது படத்தை சூர்யா நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததால் வெறிகொண்ட வேங்கையாகிவிட்டார் இயக்குநர் ஹரி என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மொத்தம் 15 படங்களை இயக்கியுள்ள ஹரி அதில் 6 படங்களை சூர்யாவை வைத்தே இயக்கியுள்ளார். சொல்லப்போனால் சூர்யாவின் கமர்சியல் மார்க்கெட்டை உயர்த்திய பெருமை பாலா,கவுதமுக்கு அடுத்தபடியாக ஹரிக்கு மட்டுமே உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹரி கடைசியாக இயக்கிய ‘வேங்கை’,’சிங்கம்3’,’சாமி 2’ஆகிய மூன்று படங்களுமே தொடர்ச்சியாக ஊத்திக்கொண்டன. இதனால் அடுத்த படம் கிடைக்காமல் தவித்து வந்த ஹரி சூர்யாவிடம் சரணாகதி அடைந்தார்.

தோல்விப்படங்கள் கொடுப்பதில் ஹரிக்கு இணையாக இருந்த சூர்யாவோ ‘விஸ்வாசாம்’படம் ரிலீஸான சமயத்திலிருந்து அதன் இயக்குநர் சிவாவைத் துரத்திப்பிடிக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். கடந்த ஏப்ரல் மாதம் இக்கூட்டணியின் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் ரிலீஸான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ‘லோக்கல்’படம் படு தோல்வி அடைந்ததால் அப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தத் தொய்வைப் பயன்படுத்தி சிவாவைச் சந்தித்து ரஜினி ஒரு கதை கேட்கவே குழப்பம் அதிகரித்தது. இந்த சமயத்தில்தான் ஒருவேளை சிவா ரஜினி படத்தை இயக்குவதில் உறுதியாக இருந்தால் நாம சேர்ந்து பண்ணலாம் என்று உறுதி அளித்திருந்ததாகத் தெரிகிறது.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு சிவா, சூர்யா கூட்டணி மீண்டும் உறுதியாகவே நேற்று சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூர்யா39’என்ற அந்த புராஜக்ட் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே ‘சூரரைப்போற்று’படம் பாதி மட்டுமே முடிந்துள்ள நிலையில், சிவாவின் படத்தை முடித்து சூர்யா ஹரி படத்துக்கு வருவதற்கு மேலும் ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகலாம். அதிரடி, ஆக்‌ஷன் டைரக்டர் ஏற்கனவே பல மாதங்கள் சும்மா காத்திருந்த நிலையில் மேலும் 8 மாதங்கள் காத்திருக்கமுடியுமா? எனவேதான் வெறிபிடித்து அலைகிறார் ஹரி.