நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த, என்.ஜி.கே மற்றும் ''காப்பான்'' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தாலும், பெரிதாக வெற்றி பெறாமல் போனது. 

இதை தொடர்ந்து, தற்போது சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த படத்தை, நடிகர் மாதவனை வைத்து 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.  இந்த படத்தை சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக சூர்யா தன்னுடைய 39வது படத்திற்காக இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்பட்டது.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யாவின் சகோதரர், கார்த்தி அண்ணன் ஹரி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' என சூர்யாவிற்கு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 11  வருடங்களுக்குப்பின் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படத்தில் சிங்கம் படத்தின் அனைத்து சீரீஸ்களிலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுஷ்கா மீண்டும் இப்படத்தில் அவருக்கு ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.