சூர்யாவின் நடிப்பில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸாகவுள்ள ‘என்.ஜி.கே’ படத்துக்கு அவரது ரசிகர்கள் ஆசை ஆசையாக வைத்த கட் அவுட்டை பட ரிலீஸுக்கு முன்னரே போலீஸார் அகற்றியுள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்கள் பயங்கர அப் செட் ஆகியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள் ‘சர்கார்’ படத்துக்கும் அஜீத் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ படத்துக்கும் முறையே 185 அடி 200 அடிகளில் கட் அவுட் வைத்திருந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சூர்யா ரசிகர்கள் திருத்தணி அருகே 215 அடியில் பிரம்மாண்ட கட் அவுட் உருவாக்கியிருந்தனர். இந்த கட் அவுட் இன்று மாலை 4 மணிக்குத்தான் ரசிகர்கள், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவதாக இருந்தது.

சூர்யா ரசிகர் மன்றத் தலைவராக உள்ள திருத்தணியைச் சேர்ந்த எல்.டி.ராஜ்குமார் என்பவர்தான் இந்த  215 அடி உயரத்தில் கட் அவுட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். ரூ 7லட்சம் பொருட்செலவில் 40 தொழிலாளர்கள் கேரளா மற்றும் ஆற்காடு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். கட்அவுட் வண்ணம் தீட்ட 25 நாட்கள், சாரம் அமைக்க 5 நாட்கள், கட் அவுட் அமைக்க 5 நாட்கள் என 35 நாட்கள் கடுமையாக உழைத்து 215 அடி உயரம் கொண்ட சூர்யா கட் அவுட் வைத்துள்ளார். திருத்தணி-சென்னை பைபாஸ் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய கட் அவுட்டைப் பார்வையிட வரும்படி சூர்யா, செல்வராகவன் உட்பட்ட படக்குழுவினருக்கு அழைப்பும் விடுத்திருந்தார் ராஜ்குமார்.

இந்நிலையில் இந்த கட் அவுட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் கட் அவுட்டை உடனே அப்புறப்படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார். தாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய கட் அவுட் பட ரிலீஸ் வரைக்கும் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று சூர்யா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.