கேரளாவில் தற்போது படிப்படியாக வீட்டின் உள்ளே புகுந்த வெள்ள நீர் குறைய துவங்கியுள்ளது. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் பழையபடி தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 

ஆனால் வெள்ளத்தின் காரணமாக வீடிற்குள் அதிக அளவு தண்ணீர் புகுந்ததால், வீடு முழுவதும் மண், சேறு, பாம்பு மற்றும் பூச்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இதனை அகற்றுவது  மக்களுக்கு சற்று கடினமாகவே உள்ளது என கூறப்படுகிறது. 

மேலும் வெள்ளத்தால் அங்குள்ள சாலைகள், பாலங்கள், பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதனால் கேரள மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு உதவும் வகையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவர்களுக்கு  உதவி கரம் நீட்டி வருகின்றனர். 

அதே சமயம், சாதாரண மக்கள் முதல் நடிகர் நடிகைகள், தொழிலதிபர்கள் வரை அனைவருமே உதவி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் விஜய் 70 லட்சம் ரூபாயை கேரள மக்களுக்கு நிவாரண தொகையாக கொடுத்தார். மேலும் ஏற்கனவே  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், நடிகர் கமல் ரூ.25 லட்சம், நடிகர் விக்ரம் 30 லட்சமும், நடிகர் விஜயகாந்த் 1 கோடி ரூபாய் என பல நடிகர்கள், நடிகைகள்  தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

இவர்களை தொடர்ந்து  பாலிவுட் திரைபிரபலங்கள் பலரும் கேரள மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில், தற்போது டோனி படத்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனி வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் கேரள மக்களுக்கு உதவுவதில் விஜயை மிஞ்சியுள்ளார்.

இவரிடம் ரசிகர் ஒருவர், 'நான் கேரள மக்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும், ஆனால் என்னிடம் காசு இல்லை என சுஷாத்திடம் கூறியுள்ளார். இவருக்கு சுஷாந்த் நான் உங்கள் பெயரில் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் அதை வைத்து நீங்கள் உதவுங்கள் என கூறியுள்ளார். மேலும் சொன்னது போலவே ஒரு கோடி ரூபாய் அனுப்பியுள்ளார் இவரின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.