கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனால் வேலை இழந்து தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நடிகர் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நமக்காக தங்களது உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டல் ஒன்றை இலவசமாக கொடுத்திருந்தார்.


அதேபோல் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் 45 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூஹு, பாந்த்ரா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளித்து வருகிறார். அதற்காக சக்தி அன்னதானம் என்ற அமைப்பையும் தொடங்கியுள்ள சோனு சூட், வேலையில்லாத கூலித்தொழிலாளர்கள் யாரும் உணவின்றி வாடக்கூடாது என்பதில் உறுதியாக கொண்டு உதவி வருகிறார். 

 

சொந்த மாநிலத்திற்கு செல்ல துடியாய் துடித்த தொழிலாளர்களை பஸ் மற்றும் விமானம் மூலமாக அனுப்பிவைத்தார். சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் கேரளாவில் தவித்து வந்த 167 புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. 

தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில போலீசுக்கு 25 ஆயிரம் Face Shield எனப்படும் முகக் கவசத்தை வழங்கியுள்ளார். இதற்காக மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்துடன் என்னுடைய போலீஸ் சகோதர, சகோதரிகள் தான் உண்மையான ஹீரோக்கள், அவர்கள் செய்யும் பணியை பாராட்டும் விதமாக இது ஒரு சின்ன விஷயம் என தெரிவித்துள்ளார்.