நடிகர் சிவகார்த்திகேயன் தனி நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, 'சீமராஜா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. ஆனால் இவர் தயாரித்து, நடித்திருந்த 'கனா' திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை செய்தது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயன், இரண்டாவதாக தயாரித்துள்ள படத்தில்  பிரபல தொகுப்பாளரும், சீரியல் நடிகருமான ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.  'நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற பெயரில்  உருவாகியுள்ள, இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார். 

நடிகை ஷெரின் கஞ்சவாலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத், யுடியூப் புகழ் விக்னேஷ்காந்த், ராதாரவி, மயில் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய, சிவகார்த்திகேயன், விழா மேடையிலேயே தன்னுடைய மூன்றாவது படத்தை தயாரிக்க உள்ள இயக்குனரை அறிவித்தார்.

கடந்த இரண்டு படங்களில் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த முறை, சிறிய பட்ஜெட்டில் மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த 'அருவி' படத்தின் இயக்குனர்  அருண் பிரபு இயக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.