இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். 

விவசாயிகளால் ஓரங்கட்டப்பட்டு அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் விதைகளை தேடிச் சென்று சேகரித்து 169 பழைய ரகங்களை கொண்டுவந்து நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி தமிழகம் கடந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்தவர் இந்த ஜெயராமன். . 


பாரம்பரிய உணவால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்ற உயரிய நோக்கத்தில் சேகரித்து வழங்கினார். ஆனால் நோய் வரக்கூடாது என்று நினைத்தவருக்கு கொடிய புற்றுநோய் சிறுநீரகத்தில் வந்தது நெல் ஜெயராமனுக்கு. கொடிய நோய் வந்த போதும் தனது பணியை செய்து கொண்டே இருந்தார்.

உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து முழு மருத்துவச் செலவையும் நான் ஏற்கிறேன் என்று அதற்காண முன்பணத்தையும் மருத்துவமனைக்கு செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது மகன் படிப்பு செலவையும் ஏற்றார்.

அதன் பிறகு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்து உதவிகளும் செய்தனர்.  மேலும் அவரது சிகிச்சைக்காக  தமிழ அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் மரணடைந்தார். அவரது உடல் தற்போது அவரது நண்பர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 11 மணிக்கு மேல் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஏரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி கரட்டுமேடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்வுள்ளன.

இந்நிலையில் நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லவிம் இறுதிச் சடங்குகளை நடத்தவும் ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது சிகிச்சை செலவு மற்றும் அவரது மகன் படிப்புச் செலவை ஏற்ற சிவ கார்த்திகேயன் இதையும் ஏற்றுக் கொண்டுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.