சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 168 வது படத்தில், நடிகர் சித்தார்த் இணைந்து நடிக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர் நடிப்பில், பொங்கல் விருந்தாக வெளியான 'தர்பார்' திரைப்படம், பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறிவருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

அதைப்போல் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும், 'தர்பார்' திரைப்படம் நல்ல வசூலை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில், ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகை மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திர பட்டாளம் பலர் நடித்து வரும் நிலையில் புதிதாக நடிகர் சித்தார்த் இணைந்துள்ளார். ஒருவேளை ரஜினியின் மகளாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிகர் சித்தார்த் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சித்தார்த் தற்போது கமலஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2 ' படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் ரஜினி , கமல் என இருவருடனும் இணைத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.