தனது மகன் சிம்பு மீது ஏகப்பட்ட கடுப்பில் இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த ‘மாநாடு’படம் தொடர்பான பஞ்சாயத்துக்கு டி.ராஜேந்தர் கலந்துகொள்ளச் செல்லவில்லை என்றும் அவருக்குப் பதிலாக உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார் என்றும் தெரிகிறது.

இரு மாதங்களுக்கு முன்பு டிராப் செய்யப்பட்ட ‘மாநாடு’படத்துக்குத் தந்த அட்வான்ஸை சிம்பு திருப்பித் தரவேண்டும் அல்லது உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான பஞ்சாயத்துக்கு சிம்புவின் சார்பாக அவரது தந்தை டி.ஆர்.அழைக்கப்பட்டிருந்தார். தன் மகனின் செயல்பாடுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி அவர் பஞ்சாயத்துச் செல்ல மறுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து மிகவும் கோபமடைந்த பஞ்சாயத்துக்குழு அடுத்து நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிம்பு, டி.ஆர். அல்லது உஷா ராஜேந்தர் ஆகிய மூவரில் ஒருவர் விளக்கம் தராவிட்டால் சிம்புவுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்கத் தடை விதிக்கும் ‘ரெட்’போடப்படும் என்று எச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிறன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உஷா ராஜேந்தர், தன் மகன் ‘மாநாடு’படத்தில் நடிக்கத்தயாராக இருப்பதாகவும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடிப்பார் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

தன் படத்தால் சிம்பு முடக்கப்படுவதை விரும்பாத ‘மாநாடு’தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சற்று இறங்கி வந்து படத்தைத் துவங்குவது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. தனது வறட்டுப் பிடிவாதங்களிலிருந்து இறங்கி வந்து சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பதே பொதுவான ரசிகர்களின் எண்ணம்.