இன்னும் கொஞ்சநாள் தலைமறைவாக இருந்தால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் தன்னை  முற்றிலும் மறந்துவிடுவார்கள் என்கிற பயத்தில், சுமார் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பாங்காங்கில் பதுங்கியிருந்த நடிகர் சிம்பு நாளை சென்னை திரும்புவதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தவிர்த்து தான் நடித்த அத்தனை படங்களிலும் பஞ்சாயத்துக்களுக்கு பஞ்சமில்லாமல் நடித்து வந்தவர் சிம்பு. சமீப காலங்களில் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களிடம் பெரும் தொகைகளை அட்வான்ஸாக வாங்கிய அவர் சொன்ன்படி படம் நடித்துத் தரவில்லை. அந்தப்பட்டியலில் கடைசியாக சிக்கிய சூர்யாவின் பினாமி ஞானவேல் ராஜாவும் ‘மாநாடு’படத்தை துணிந்து டிராப் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சிம்புவால் வாழ்விழந்தோர் சங்கம் ஒன்றைத் துவக்க முயலவே அதை மோப்பம் பிடித்த சிம்பு வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் என்ற பெயரில் விஜய் மல்லையா போலவே தப்பி ஓடினார்.

அந்த சம்பவம் முடிந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நாளை அவர் சென்னை திர்ம்புவதாகவும், வந்தவுடன் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தப்போவதாகவும் ,இனிமேல் ஒரு புதிய சிம்புவை தமிழ் சினிமா தரிசிக்கப்போகிறதென்றும் அவரது அல்லக்கைகள் சிலர் ட்விட்டர் பதிவுகள் போட்டு வருகிறார்கள். நாளை சனிக்கிழமை என்பதால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு ஞாயிறன்று அவரால் பாதிக்கப்பட்ட சங்கம் பஞ்சாயத்தைக் கையிலெடுக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.