நகைச்சுவை நடிகர் செந்திலை யாராலும் மறக்க முடியாது, கவுண்டமணி – செந்தில் ஜோடி  தமிழக மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. 1980 – 90 களில் அவர்கள் இருவரும் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். லட்சக்கணக்கான ரசிகர்களை இந்த ஜோடியினர் மகிழ்வித்தனர்.

அதுவும் கவுண்டமணியிடம் செந்தில் அடி வாங்குவதும் முகத்தை அப்பாவி போல் அவர் வைத்துக் கொள்வதும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. பின்னர் புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் வர வர அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

அதுவும் வடிவேல் தலைதூக்கிய பின் கவுண்டமணி – செந்தில் இருவருமே திரைத் துறையில் இருந்து ஒதுங்கியே இருந்நனர். அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே அவர்கள் தலைகாட்டி வந்தனர்.

செந்திலைப் பொறுத்தவரை திரையுலகைத் தவிர தீவிர அரசியலிலும் ஈடுபட்டார், அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் டி.டி.வி.தினகரனை ஆதரித்து வந்தார். மேலும் செந்திலின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் விவசாயமும் செய்து வந்தார்.

இந்நிலையில் அண்ணைமயில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் செந்தில், மதப்பிரச்சாரம் செய்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களிடம் கேட்டபோது,  செந்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துவ மதத்தில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது உண்மையா ? அல்லது வதந்தியா ? என்பது குறித்து நடிகர் செந்தில் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.