பெண் எம்.பி.க்களின் ஆடை விவகாரமாய் சர்ச்சை எழுப்புக்கொண்டிருப்பவர்களை நோக்கி, ’நமது கலாச்சாரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு பாசாங்கு செய்வதை முதலில் நிறுத்துங்கள்’என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தியும், பசிராத் தொகுதியில் 29 வயது நடிகை நுஸ்ரத்தும் வெற்றிபெற்றனர். முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள இருவரும் மாடர்ன் உடையில் சென்று தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டனர். நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் அணிந்து அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இக்கண்டனக்குரல்களுக்கு பதிலளித்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா,”பெண்கள் என்ன உடை அணியலாம். எந்த மாதிரி உடை அணியக்கூடாது என்பது குறித்து ஆண்கள் கமெண்ட் அடிக்கும் காலம் உடனே முடிவுக்கு வரவேண்டும். நமது கலாச்சாரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நடக்கும் மிகப்பெரிய பாசாங்கு இது என்று நான் கருதுகிறேன்.  எம்.பிக்களாக அவர்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்கவேண்டுமே ஒழிய அவர்கள் அணியும் ஆடையை அல்ல”என்று அவர்களை சப்போர்ட் செய்கிறார் திவ்யா.