நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு காதல்,கல்யாண கிசுகிசுக்களைச் சந்தித்து வந்த காமெடி நடிகர் சதீஷுக்கு நேற்று நிஜமாகவே திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அச்செய்தியை சதீஷ், ஏனோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு வெளியான மிர்ச்சி சிவாவின் ’தமிழ்ப்படம்’ மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு பல படங்களின் திருமணக்காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகப் பரபரப்பாவதும், அச்செய்தியை சதீஷ் மறுப்பதும் ஒரு வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் இம்முறை நடந்திருப்பது நிஜ நிச்சயதார்த்தம் என்று சொல்லப்படுகிறது. சதீஷுக்கு தற்போது வயது 33 ஆகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு திருமணம் செய்வதற்காகப் பெண் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் சரியான பெண் அமையவில்லை.

இந்நிலையில் அண்மையில் வெளியான ’சிக்ஸர்’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது, திருமணம் குறித்த பேச்சு  மீண்டும் வந்திருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கைக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும் தகவல் படக்குழுவினர் மூலம் தெரியவந்திருக்கிறது. உடனே அதே படக்குழுவினர் மூலம் அப்பெண்ணை மணமுடிக்க சதீஷ் விருப்பம் தெரிவித்தாராம். இயக்குநர் சாச்சியும் தம் வீட்டாரோடு பேசியிருக்கிறார்.தொடக்கத்தில் யோசித்த அவர்களும் பின்பு ஒப்புக்கொண்டனராம். இதனால் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. 

நடிகர் சதீஷும் மணப்பெண்ணும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நிச்சயதார்த்தம் மட்டுமே ரகசியமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், திருமணத்தை திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ் தந்து பிரம்மாண்டமாக நடத்தவே இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ட்விட்டரில் எப்போதும் படு பிசியாக இருந்து கொண்டு தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வரும் சதீஷ், இதுவரை தனது நிச்சயதார்த்தப் படங்களை ஏனோ வெளியிடவில்லை.