’திருநங்கைகளை நம் சமூகத்தில் எந்த அளவுக்கு ஒடுக்கி வைத்திருக்கிறோம் என்பதை மிக அப்பட்டமாக ‘நாடோடிகள்2’ படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி காட்டியிருக்கிறார். அவர்களிடம் அவ்வாறு நடந்துகொண்டதற்காக நாம் வெட்கப்படவேண்டும்’ என்று உருக்கமாகப் பேசினார் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார்.

தமிழில் கடந்த  2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’நாடோடிகள்’. நண்பனின் காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள்,  காதல், தோல்வி, ஏமாற்றம்,  வலி என உணர்வுப் பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் சமுத்திரக்கனி.பின்பு 11 வருடங்களுக்கும் கழித்து  இப்படத்தின் இரண்டாம் பாகமாக ’நாடோடிகள் 2’எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இதில் அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணா, ஞானசம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை  சென்னை பிரசாத் லேப்பில்  நடைபெற்றது.

இச்சந்திப்பில் பேசிய நடிகர் சசிக்குமார்,”சமுத்திரக்கனி படம் என்றாலே உடனே நடித்துவிடுவேன். அவர் படத்தில் மட்டும் கஷ்டப்படுறதே தெரியாது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொண்டே வேலை வாங்கிவிடுவார். படமாகப் பார்க்கும் போது தான் எவ்வளவு வேலை வாங்கியிருக்கார் என்று தெரியும். படப்பிடிப்பு தளத்தில் அவர் அளிக்கும் ஊக்கம், நம்மை அந்த அளவுக்கு ஓட வைக்கும்.ஒரு நடிகரின் ப்ளஸ், மைனஸ் இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி என்னுடைய ப்ளஸ், மைனஸ் தெரிந்தவர் சமுத்திரக்கனி. நான் எந்த வசனம், எங்கு நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்பதுவரை தெரிந்து வைத்திருப்பார். அவர் எழுதியிருக்கும் வசனங்களை இந்தப் படத்தில் என் உடலும், ஆன்மாவும் பேசியிருக்கிறது.

நானும் இவரும் 3 படங்கள் பண்ணிட்டோம். மலையாளத்தில் மோகன்லால் சாரும் - ப்ரியதர்ஷன் சாரும்  42 படங்கள் சேர்ந்து பண்ணியிருக்காங்க. நாங்கள் அந்த அளவுக்குப் போக முடியாவிட்டாலும், 15 படங்களாவது பண்ணனும் என்ற ஆசையிருக்கிறது. 'நாடோடிகள்' முதல் பாகத்தில் 'சம்போ சிவ சம்போ' பாடல் பெரிய ஹிட். அதை விட இதில் சிறப்பாகப் பண்ண வேண்டும் என்ற சவால் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு இருந்தது. அதையும் ரொம்பவே சிறப்பா பண்ணியிருக்கார்.இப்போதுள்ள காலகட்டத்தில் படம் பண்ணுவது எளிது. வெயில், மழை பார்க்காமல் நடித்து முடித்துவிடுவோம். அதை வெளியிடுவது தான் கஷ்டமாக இருக்கிறது. முன்பு சின்ன படங்கள் தான்  ரிலீஸாவது கஷ்டமாக இருந்தது, இப்போது பெரிய படங்களுக்கும்  அதே கஷ்டம் இருக்கிறது. இந்தப் படத்துக்குள் பரணி வந்தவுடன் தான் 'நாடோடிகள் 2' ஆக மாறியது. அவருக்கு முதல் பாகத்தில் எப்படி பெயர் கிடைத்ததோ, அதே போல் 2-ம் பாகத்திலும் கிடைக்கும். 

இந்தப் படத்தில் நமீதா என்ற திருநங்கை ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அவர் மூலமாக அந்தச் சமூகம் படும் வேதனையைப் பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த பிறகு என்ன செய்திருக்கிறோம் என்பதை சமுத்திரக்கனி அனைவரிடமும் காட்டுவார். சில காட்சிகளை நமீதா பார்த்துவிட்டு அழுது கொண்டிருந்தார். அப்போது தான் அவர்களை நாம் எவ்வளவு ஒடுக்கி வைத்திருக்கிறோம் என்பது புரிந்தது. நாமெல்லாம் தலைகுனிய வேண்டும். அவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதை இந்தப் படத்தின் மூலமாக சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார்”என்று பேசினார் சசிக்குமார்.