நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில்,  கடந்த வருடம் வெளியான '96' திரைப்படம் பலரது பள்ளி நினைவுகளை, நினைவூட்டும்  படமாக இருந்தது.  இந்த படத்தை பார்த்த பலர் தங்களுடைய பள்ளி நினைவுகள் மீண்டும் திரும்பியதாக கருத்து தெரிவித்திருந்தனர்.  

'96 ' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று,  பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  தற்போது இந்த படம் கன்னடம்,  தெலுங்கு,  உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கில்,  தமிழில் '96 ' படத்தை இயக்கிய பிரேம் குமாரே இந்த படத்தை ரீமேக் செய்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி நடித்த ராம் கதாபாத்திரத்தில் நடிகர் சர்வானந்த் நடித்து வருகிறார்.  த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தாய்லாந்து சென்ற சர்வானந்த், ஸ்கை டைவிங் செய்துகொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் படுகாயமடைந்துள்ளார்.  இவருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு , மற்றும் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் காயம் பலமாக இருப்பதால், இரண்டு மாதங்களுக்கு மேல் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  எனவே 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சர்வானந்துக்கு, திடீரென இவ்விபத்து நடந்துள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு பின்னரே இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.