தனக்குப் பன்றிக் காய்ச்சல் வந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்திகளால் புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில், ’முற்றிலும் குணமாகிவிட்டேன். நடிக்கக் கூப்பிடுங்க பாஸ்’ என்று அபயக் குரல் எழுப்பியிருக்கிறார் ‘பருத்தி வீரன்’ சித்தப்பு சரவணன்.

‘வைதேகி வந்தாச்சி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி 25 படங்களுக்கும் மேல் நாயகனாக நடித்த சரவணன், பின்னர் வாய்ப்பின்றி சில வருடங்கள் வீட்டில் இருந்தார். அடுத்து குணச்சித்திர நடிகராக அவர் நடித்த ‘பருத்தி வீரன்’ படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து பிசியான சரவணன் சில வாரங்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக அவரே தெரிவித்தார்.

ஆனால் அவர் முற்றிலும் குணமான நிலையிலும் புதிய வாய்ப்புகள் எதுவும் வராததால், ‘நான் சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது...அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் ஒரு படத்தில் நடித்தும் விட்டேன்.இன்னமும் பல பேர் எனக்கு பன்றி காய்ச்சல்   இருக்கிறது என்று போன் செய்து நலம் விசாரிக்கிறார்கள்.அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்கிறார் சரவணன்.