நடிகர் சரத்குமாருக்கு, ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்தது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருந்தாலும், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த இரு மாதங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், விஷ்ணு விஷால், மகேஷ் பாபு, வடிவேலு, சிரஞ்சீவி, மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரும். நடிகைகள் குஷ்பு, மீனா, திரிஷா, ஷோபனா, ஷெரின், கஜோல், ஜான்வி கபூர், பாரதிராஜா ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இந்நிலையில், தற்போது நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். தொற்று பாதிப்பு உறுதியானதும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2-வது முறை. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
