Actor Santhanam in front of the case filed by the Chennai High Court
வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்டுவதற்காக அந்நிறுவத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரிடம் 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரம் 3 ஆணடுகளாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது.
சந்தானம் கொடுத்த 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை பாக்கி வைத்த சண்முக சுந்தரம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அளித்துள்ளார்.
மீதி பணத்தை கேட்டு நேற்று வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் நிறுவனத்துக்கு சென்ற நடிகர் சந்தானத்துக்கும் அங்கிருந்த சண்முக சுந்தரம் மற்றும் அவரது நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகறாறு முற்றி கைகலப்பாக மாறியது.
அவர்கள் நடுத் தெருவுக்கு வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சந்தானத்துக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து இரு தரப்பினர் சார்பிலும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தானம் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் சந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் சூர்யா மருத்துமனையில் இருந்து தப்பி தற்போது தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நடிகர் சந்தானம் 2 வாரம் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட வேண்டும் என கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
