தமிழ் சினிமாவில் வேறு வில்லன்களே இல்லாததுபோல் எதற்கெடுத்தாலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் இழுத்துவிடப்படுவதை மறுத்து ட்விட் பண்ணியிருக்கிறார். லேட்டஸ்டாக அவர் தல60 படத்தில் வில்லனாக நடிப்பதாக வந்த செய்திகளையும் மறுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படம் பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், ’வாலி’ படத்தில் அஜித்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தல 60 படத்தில் அவருக்கே வில்லனாக நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல், அவரும் போனிகபூரை நேரில் சந்தித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிச்சயம் இப்படத்தில் மிரட்டலான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இருப்பார் என அவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், தான் அஜித்திற்கு வில்லனாக நடிக்கவில்லை, அது வெறும் வதந்தி தான் என விளக்கமளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தல 60 படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. அஜித் மீதும், போனி கபூர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, ரஜினியின் ’தர்பார்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் விஜய்யின் ’தளபதி 64’ படத்தில் அவர் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட படக்குழுக்கள் அந்தத் தகவலை மறுத்தன. தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன்களான நாச,பிரகாஷ்ராஜ், பசுபதி போன்றோர் மெல்ல ரிடையர்ட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக்க மீடியாக்கள் துடிப்பதன் பின்னணி புரியவில்லை.