விஜய், அட்லி கூட்டணியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘பிகில்’பட ட்ரெயிலரைப் பார்த்ததும் தான் கண் கலங்கி அழுதுவிட்டதாக பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆனந்தக் கண்ணீருக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் பிகில் படம் சென்சாருக்கு சென்றுள்ள நிலையில், அதன் சரியான ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான அப்பட ட்ரெயிலர் இதுவரை வெளியான அத்தனை ட்ரெயிலர்களின் சாதனைகளையும் முறியடித்து இந்திய அளவில் ஷாருக் கானின் ‘ஸீரோ’பட ட்ரெயிலருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த ட்ரெயிலர் குறித்து விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் உணர்வுகளைப் பதிவிட்டு வரும் நிலையில் விஜய் டிவி பிரபலமும் பிரபல நகைச்சுவை நடிகருமான ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில்,..’பிகில்’பட ட்ரெயிலரில் என் மகளைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டன. அப்படத்தில் நடிக்க என் மகளுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கிய அட்லி சார்,விஜய் சார் இருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி...ட்ரெயிலர் மிக அபாரமாக வந்திருக்கிறது...என்று பதிவிட்டிருக்கிறார்.

ரோபோ சங்கரின் மூத்த மகளான இந்திரஜா தனது தோற்றத்துக்கு ஏற்றபடி ஒரு குண்டுப் பெண்ணாகவே இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு கால்பந்து பயிற்சி கொடுக்கும் விஜய்,’இவ்வளவு குண்டா இருந்தா எப்பிடி நீ நல்லா விளையாடமுடியும்? என்று கண்டிக்க, அதற்கு இந்திரஜா ‘எங்க அம்மாவும் குண்டு எங்க அப்பாவும் குண்டு’என்று அழுதபடியே பதில் சொல்லும் ஒரு காட்சி ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ளது.