காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். "இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி" படத்தின் போது, ஆரம்பமான இவரது பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் சரிவர கலந்து கொள்ளாமல், படத்திற்காக போடப்பட்ட செட்டால்,  பல கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டதாகவும்,  இதற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அல்லது படத்தை நடித்து முடித்துக் கொடுக்க வேண்டுமென, இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார்.

தயாரிப்பாளர்கள் சங்கம் பல முறை, வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும், அது முடியாமல் போகவே... வடிவேலு நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.   கடைசியாக இவர் நடிப்பில் 'கத்தி சண்டை'  மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. 

அதை தொடர்ந்து இவர் கமிட்டான படங்களில் இவரால் தயாரிப்பாளர் சங்க தடையை மீறி நடிக்க முடியவில்லை. இந்நிலையில் கமலஹாசன் நடித்து வரும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு. 

இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது மீண்டும் பிரபல நடிகரும் தொழிலதிபருமான ஆர்.கே.வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 'நானும் நீயும் நடுவுல பேயும்' என்கிற படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு, அந்த படத்தில் இதுவரை நடிக்காமல் உள்ளதாக ஆர்.கே.தன்னுடைய புகாரில் கூறியுள்ளார். இதனால் தற்போது மீண்டும் வடிவேலுக்கு மீண்டும்  நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.