இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை தற்போது நிறைவேற துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் பணிகள், ஆரம்பமாகி சைலண்டாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, பார்த்திபன், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா,  ஐஸ்வர்யா லட்சுமி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.

மேலும் இன்னும் பல பிரபலங்கள், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.  இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, தாய்லாந்த் செல்ல உள்ளதாக முகநூல் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் ரியாஸ் கான்.

வின்னர், கஜினி, ஆளவந்தான், உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.  மேலும் சமீப காலமாக சின்னத்திரை, சீரியல்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நந்தினி சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதை உறுதி செய்துவிட்டு, ஷூட்டிங்கில் கலந்து கொள்ள தாய்லாந்து பறக்கிறார் ரியாஸ் கான். பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.