ராஜமெளலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க புதிட நடிகை யாரும் ஒப்பந்தமாகாத நிலையில் அப்படம் குறித்து கிளம்பிய பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. முன்பு படத்தை விட்டு வெளிநடப்பு செய்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸுக்குப் பதிலாக அவரை விட பேரழகி ஒருவரை பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர்களான பாகுபலியின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர் - ராம்சரண் தேஜா இணையும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற மெகா பட்ஜெட் திரைப்படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் வரலாற்றை மையப்படுத்தி, சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகி வருகிறது. தொடக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். இரண்டாவது ஷெட்யூலையும் கடந்து வேகமாய் நடந்து வந்த படப்பிடிப்பின் மத்தியில், டெய்ஸி எட்கர் தனிப்பட்ட சில காரணங்களால் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் அந்தப் பாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

அதனால் படப்பிடிப்பும் பெருமளவு பாதிக்கப்பட்டதால் ராஜமவுலியின் படம் 2020ல் சொன்னபடி ரிலீஸாகாது என்பது உட்பட ஏராளமான வதந்திகள் பரவின. அடுத்து ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு படப்பிடிப்பு சமயங்களில் அடிபட்டதால் படக்குழு மேலும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படக்குழு  நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை ஒரு  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், “ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த ஆண்டு மிகவும் தனித்துவமானது. 70 சதவிகிதப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக நடிப்பவரையும், வில்லனாக நடிப்பவரையும் நாளை (நவம்பர் 20) அறிவிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

அந்த அறிவிப்பின்படி, நேற்று (நவம்பர் 20) மாலை இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இங்கிலாந்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இவர்.இந்த அறிவிப்புடன், நடிகர் ரே ஸ்டீவன்சன் இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்றும், அலிசன் டூடி வில்லியாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் ஏப்ரல் ‘20ல் வெளியாகாது என்று தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘இப்படத்தில் ஒப்பந்தமானதால் தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவை கண்டு பெரிதும் மகிழ்வதாக நடிகை ஓலிவா மோரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.