‘முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அவர்கள் ஆட்சியில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள்’ என்பதால் அ.தி.மு.க.வில் இணைந்தேன் என்கிறார் பிரபல வில்லன் நடிகர் ரவி மரியா.இவரது இந்தப் பேட்டியால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துபோயுள்ளது.

நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான ’ஆசை ஆசையாய்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. தொடர்ந்து ’மிளகா’ என்ற படத்தை இயக்கினார்.  இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெருத்த அடி வாங்கியதால் இயக்கத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர், எழில் இயக்கிய ’மனம் கொத்தி பறவை’ படம் மூலம் காமெடி வில்லன் ஆனார். இதையடுத்து காமெடி வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் திடீரென அதிமுகவில் சேர்ந்தார்.

திடீரென்று அரசியலில் சேர்ந்தது பற்றிப் பேசிய அவர், ‘’எனது அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். அவரை போல உதவிகள் செய்பவர். ஆனால், எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. சமீபகாலமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அவர்கள் ஆட்சியில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதோடு எனக்குள் மனமாற்றம் நடந்தது. அதிமுகவில் சேருமாறு அந்தக் கட்சியில் இருக்கும் என் நண்பர்கள் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். இதுதான் சரியான நேரம் என்று அதிமுகவில் நேற்று என்னை இணைத்துக்கொண்டேன். 

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதி முகவுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறேன்.இப்போது, வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். எழில் இயக்கியுள்ள ’ஜெகஜாலகில்லாடி’யில் காமெடி வில்லன். மற்றும் ’கூர்கா’, ’காட்டேரி’, ’அட்லீ’,’வெண்ணிலா கபடி குழு 2’, ஆதி நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் படம் என தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருக்கிறேன்’’ என்கிறார் ரவிமரியா.