'என்ன பெத்த ராசா' படத்தில், நடிகராக அறிமுகமான ராஜ்கிரண், நடிகர் என்பதை தாண்டி சில படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் அதற்கும் ஒரு படி மேலே போய் இப்போது, பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ராஜ்கிரண் தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு தமிழில் 'குபேரன்' என்றும் மலையாளத்தில்  ‘ஷைலாக்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில், 'என் ராசாவின் மனசிலே' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, மீனாவுடன் மீண்டும் ஜோடி சேர்த்துள்ளார் ராஜ்கிரண்.

இந்நிலையில், இப்படத்திற்காக முதல் முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் ராஜ்கிரண் கூறியுள்ளதாவது,  

 

இறை அருளால்,

என், சில படங்களுக்கு
நான் வசனம் எழுதியிருந்தாலும்,

முதன் முறையாக,

"குபேரன்" படத்துக்குத்தான்,
வசனத்தோடு, "பாடலும்" எழுதியிருக்கிறேன்...

"கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல்"

(பல்லவி)

மாணிக்கக்கிளியே
மரகதக்குயிலே
தூவுங்கள் பூவை
ஜோடிப்புறாக்கள் இணைகிறதே

மாங்கல்யம் பூண
மணமகள் நாண
மங்கலம் காண
வாழ்க வாழ்கவென வாழ்த்துங்களே

வெண்ணிலவும் நட்சத்திரக்
கூட்டங்களுமாய்....
சொந்தங்களும் பந்தங்களும்
பெருகணுமே...

கல்யாண மேளம்
காற்றோடு இசைக்கிறதே...
மீனாட்சியம்மன்
கல்யாண வைபோகமே...

உள்ளங்கள் யாவும்
சந்தோசம் பொழிகிறதே...
காமாட்சியம்மன்
சீரோடு வரம்தரும் நேரம் இதா...

(மாணிக்கக்கிளியே)

(சரணம்)

சாஹரங்களாகும் உந்தன்
கருங்கூந்தலில்...
ஆலிங்கன ராகம் பெண்ணே
இதழ் மூட வா...

கண்ணாளனே என் ஜென்மமும்...ஓ
என் வாழ்க்கையும் உன் சொந்தமே... ஹோ

என் ரோசக்காரப்புயலே
என்னாசை தூண்டும் தணலே
என் நேசம் காக்கும் நிழலே
மன வானில் ஆடும் மயிலே
ஆராருங்காணா ஒயிலே

பொன் தேகம் முழுவதும்
நீந்தி சுகம் பெற
திருமகள் விழியுறங்க...

மாணிக்கக்கிளியே
மரகதக்குயிலே
தூவுங்கள் பூவை
ஜோடிப்புறாக்கள் இணைகிறதே

வெண்ணிலவும் நட்சத்திரக்
கூட்டங்களுமாய்...
சொந்தங்களும் பந்தங்களும்
பெருகணுமே...

கல்யாண மேளம்
காற்றோடு இசைக்கிறதே...
மீனாட்சியம்மன்
கல்யாண வைபோகமே...

உள்ளங்கள் யாவும்
சந்தோசம் பொழிகிறதே
காமாட்சியம்மன்
சீரோடு வரம்தரும் நேரம் இதா...

என தான் எழுதிய பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார். மங்களகரமான வார்த்தைகளோடு உருவாக உள்ள இந்த பாடல் இப்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.