சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசில் ஒப்படைத்து பலரின் பாராட்டுதலைப் பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த மாணவன் யாசினை நேரில் வரவழைத்து பாராட்டிய,  நடிகர் ரஜினிகாந்த், அவனை தனது பிள்ளை. போல நினைத்து படிக்க வைக்கப்போவதாக தெரிவித்தார்.

ஈரோடு கனி ராவுத்தர்குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்பவரின் மகன், முகமது யாசின். சின்ன சேமூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் அருகே சாலையில்  500 ரூபாய் பணக்கட்டு கிடந்ததைப் பார்த்த முகமது யாசின், அதை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைக்க அவர் அந்தப் பணத்தை  ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகமது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம். ஆனால், பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முகமது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு எஸ்.பி. சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

 

யாசினின்  இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது. பலரும் அவருக்கு உதவ தயார் உள்ளனர். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்து வருகின்றனர். முகமது யாசினும், அவரது பெற்றோரும்.

இந்நிலையில் தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக இந்த செய்தி ரஜினிகாந்துக்க தெரிவிக்கப்பட்டது.  அவரும் யாசினை சந்திக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை யாசின் தனது குடும்பத்தோடு சந்தித்து பாராட்ட தெரிவித்தார். தொடர்ந்து அந்த சிறுவனக்கு  தங்க சங்கிலி பரிசளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், யாசினின் செயல் பாராட்டுக்குரியது. அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்க்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என தெரிவித்தார்.