தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் தனது 75-வது வயதில் காலமாகியுள்ளார். அவரது உடல் நல்லடக்கம் ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் to நடிகர் - ராஜேஷின் ஆரம்பகால வாழ்க்கை 

ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் நடிகர் ராஜேஷ். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நிறைய புத்தகங்கள் படித்ததன் காரணமாக தான் கற்றதை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக கொரோனா காலக்கட்டத்தில் யூடியூப் சேனல் மூலமாக வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

3 நாட்களுக்குப் பிறகு ராஜேஷ் உடல் நல்லடக்கம்

சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று (மே 29) காலை திடீரென காலமானார். அவருக்கு வயது 75. அவரின் உடல் ராமாபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சினிமா பிரபலங்கள் பலரும் ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜேஷின் நல்லடக்கம் ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

கனடாவில் இருந்து சென்னை வரும் ராஜேஷ் மகள்

ராஜேஷின் மகள் கனடாவில் இருப்பதால் அவர் சென்னை திரும்பிய பிறகு இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும், வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) கீழ்ப்பாக்கத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் ராஜேஷின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.