பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூபாய். 3 கோடி நிதி உதவிகளை அறிவித்தார். பல முன்னணி நடிகர்கள் இதுவரை உதவிக்காக வாய் திறக்காமல் இருந்து வரும் நிலையில், இவர் செய்த உதவி பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.

இதை தொடர்ந்து, தனக்கு உதவிகள் செய்யும்படி நிறைய அழைப்புகள் வந்ததாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், அப்போதைக்கு தன்னுடைய துணை இயக்குனர்களிடம் கொடுத்து பிஸியாக இருப்பதாக சொல்லிவிட்டதாகவும், பின் தன்னுடைய அறைக்கு சென்று யோசித்தபோது, பலர் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்ததில் இருந்து தூக்கம் கூட வரவில்லை, அதனால் மற்ற உதவிகள் பற்றி தமிழ் புத்தாண்டான இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில், தான் சொன்னது போலவே... ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்று, தன்னுடைய உதவிகள் பற்றி, நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் கூறப்பட்டுள்ளதாவது... "அனைவருக்கும் வணக்கம்.... கொரோனா ஊரடங்கினால் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்த தடையும் இல்லை என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், அதைப்பற்றி தெளிவாக நடைமுறை விளக்கம் தந்த உயர்திரு.காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசைப் பொறுத்தவரை,  மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும். அதே சமயம் மக்களுக்கு உணவு தட்டுபாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெரும் இக்கட்டான நிலை உள்ளது. ஆகவே தமிழக அரசினால் அறிவுறுத்தி சொல்லப்படும் சமூக கடமைகளை கண்டிப்பாக தன்னார்வலர்களும், என் ரசிகர்களும் மற்றும் திருநங்கைகள் அபிமானிகள் உள்ளிட்ட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

நாம் பசி பிணியையும் போக்க வேண்டும். அதே சமயம் கொரோனா வைரஸ் பரவாமலும், அரசின் அறிவுரைப்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நாம் நமது தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தலை கடைப்பிடித்து, என்னால் முடிந்த வரை உதவி வருகிறேன். அதை போலவே அனைவரும் உதவிடுவோம். கொரோனவை வென்றிடுவோம்.

அன்புடன் ராகவா லாரன்ஸ்... என்று தற்போது தன்னுடைய புதிய அறிவிப்பை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்".