தன்னைச் சந்திக்க சென்னை வந்து முகவரி தெரியாமல் தவித்த ஒரு குடும்பத்திற்கு இயக்குநரும் நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் நேரில் வரவழைத்து மருத்துவ உதவி வழங்கினார்.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் குருசூரியா.வினோதமான நோய் தாக்கப்பட்டதால் குருசூரியா படுத்த படுக்கையாகி விட்டான். இந்த நிலையில் குருலட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார்.குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் தனது அக்கா மற்றும் அக்காவின் மகனுக்காக திருமண வாழ்வை தியாகம் செய்து அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்.

மிகவும் ஏழ்மையினால் அவர்களால் குருசூரியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை சந்தித்தால் தேவையான மருத்துவ உதவிகிடைக்கும் என்று சிலர் சொன்னதை கேட்டு 3 பேரும் சென்னை புறப்பட்டு வந்தனர்.ஆனால் அவர்களால் ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டு பிடித்து அவரை சந்திக்க முடியவிலலை.

இதனால் எதுவும் புரியாமல் தவித்த அவர்கள் 3 பேரும் எழும்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கடந்த சிலதினங்களாக தங்கி இருந்தனர்.இதுபற்றிய  தகவல் நேற்று பல இணையதளங்களில்  படத்துடன் வெளியானது. அதை பார்த்ததும் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவர்களுக்கு உதவ முன் வந்தார்.

படவேலைகளில் மும்முரமாக இருந்தும் இன்று காலையில் முதல் வேலையாக தனது உதவியாளரை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குருலட்சுமியும், வெங்கடேசனையும் சந்தித்து  அழைத்துவர கூறினார். அதைகேட்டதும் அவர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடித்தனர்.பின்னர் 3 பேரையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து கூறிய ராகவேந்திரா லாரன்ஸ் ‘ஒரு நம்பிக்கையோடு என்னைத் தேடி வந்த அவர்களுக்கு எனது அறக்கட்டளை மூலமாக தேவையான மருத்துவ உதவிகள் செய்வதோடு, மேலும் தேவைப்பட்டால் அரசின் உதவியையும் நாடுவேன்’என்கிறார்.