‘தர்பார்’ பட விழாவில் நடிகர் லாரன்ஸ் பேசியது கமல்ஹாசன் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தான் பேசியது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது ஹைலைட் ஆனது. லாரன்ஸின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் கமல்ஹாசன் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. லாரன்சின் பேச்சு கமல் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது அந்தப் பேச்சு இதுதான். "ரஜினி படத்துக்காக போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டிருக்கிறேன். இதை சொல்வதில் தவறில்லை. கமல் போஸ்டர் ஒட்டப்படும் போது அதில் சாணி அடித்திருக்கிறேன். அன்றைய மனநிலை அப்படியிருந்தது. இப்போது இருவரும் கைப்பிடித்து நடக்கும் போது வேறு ஏதோ நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது" என்று லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சு கமல்ஹாசன் ரசிகர்களை உசுப்பிய நிலையில், சமூக ஊடகங்காளில் கமல்  ரசிகர்கள் லாரன்ஸை விமர்சிக்கத் தொடங்கினர். இதனையடுத்து நடிகர் லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்களே, ரசிகர்களே... ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய பின்னர் சிலர் வேண்டுமென்றே நாம் கமல் சார் படப் போஸ்டர்கள் மீது சிறு வயதில் சாணியடித்ததாகச் சொல்லியதை மட்டும் முன்னிறுத்தி சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.


என் பால்ய பருவத்தில் நான் தலைவரின் மிகத்தீவிர ரசிகர். அதனால், சரியான புரிதல் இல்லாத வயதில் தெரியாமல் அவ்வாறு செய்தேன் என்பதையே சுட்டிக் காட்டிப் பேசினேன். நான் வளர்ந்த பின்னர் கமல் சாரும் ரஜினி சாரும் கைகோத்து நடப்பதைப் பார்த்து மகிழ்கிறேன். கமல் சார் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் எப்போது ஏதாவது தவறாகப் பேசியிருந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவேன். ஆனால் இந்த முறை நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. 
நீங்கள் ‘தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழா முழு வீடியோவையும் பார்த்தால்தான் நான் பேசியது உங்களுக்குப் புரியும். சிலர் திட்டமிட்டே திரித்து வெளியிடுகின்றனர். கமல் சார் மீது எனக்குள்ள மரியாதையை என் இதயம் அறியும். அதை வேறு யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் விளக்கம் அளித்தபோதும், அதை ஏற்றுகொள்ளாத கமல் ரசிகர்கள் தொடர்ச்சியாக அவரை விமர்சித்துவருகிறார்கள்.